ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சு: உக்ரைன் ஜயாதிபதி நம்பிக்கை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் இரவு அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார். ஆனால், “உக்ரைன் நலனுக்கான முடிவுகளை எடுக்க இன்னும் காலம் தேவை” எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மேலும் தொடரவுள்ளது.

ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அந்த நாடு உக்ரைனில் புதிய அரசு ஒன்றை நிறுவுவது தோல்வி அடையும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு வரும் என்றும் உக்ரைன் போர் திட்டமிட்டதை விடவும் முன்கூட்டியே முடிவுக்கு வரும் என்றும் உக்ரைன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனினும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் பற்றி இப்போதே கூற முடியாது என்று ரஷ்ய அரச பேச்சாளர் ட்மிட்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார். “இந்தப் பணி சிக்கலானது. தற்போதைய நிலையில் (பேச்சுவார்த்தை) தொடரும் என்பது சாதகமான ஒன்றாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை முற்றுகையில் இருக்கும் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து தனிப்பட்ட வாகனங்களில் சுமார் 20,000 பேர் தப்பிச் சென்றிருப்பதாக உக்ரைன் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. எனினும் மின்சாரம் இன்றி நீர் தீர்ந்திருக்கும் நிலையில் ரஷ்ய ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் அந்த நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் சிக்கியுள்ளனர்.

அசோவ் கடற்கரையின் முக்கிய நகராக இருக்கும் மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்ய படை தீவிர அவதானம் காட்டி வருகிறது. மேலும் மேற்கை நோக்கி முன்னேற இந்த நகர் முக்கியமாக உள்ளது.

நகரில் மோதல்களில் 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறைந்தது 200,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டி இருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி படையெடுத்தது தொடக்கம் ரஷ்யா இதுவரை உக்ரைனின் 10 மிகப்பெரிய நகரங்களில் எதனையும் கைப்பற்றியதில்லை. எனினும் இது 1945 தொடக்கம் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாக உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உக்ரைனில் முன்னேறிச் செல்வதில் ரஷ்யப் படைகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளது.

உக்ரைனால் ஏற்படும் சவால்களை சமாளிக்க ரஷ்ய படைகள் போராடிவருவதாக, அப்பதிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனிய படைகள் பாலங்களை சேதப்படுத்தியிருப்பது, “ரஷ்யா முன்னேறிச் செல்வதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “உக்ரைனிய ஆயுதப் படைகளின் தந்திரங்கள், ரஷ்யாவின் சூழ்ச்சியின் பற்றாக்குறையை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டன, ரஷ்ய முன்னேற்றத்தை விரக்தியடையச் செய்தன மற்றும் ரஷ்யப் படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை தற்போது 3 மில்லியனைத் தாண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அண்டை நாடான போலந்தில் மாத்திரம் 1.8 மில்லியன் பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைன் இராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷ்ய படை தலைநகர் கியேவுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறது. இதனால் சில நாட்களாகவே கியேவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சரமாரியாக ஏவுகணை, வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

கீயேவ் நகரை 3 பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்துள்ள ரஷிய படை, பெரும் தாக்குதலை நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு நேற்று 35 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதற்கிடையே கீயேவ் நகரில் நள்ளிரவில் ரஷ்ய படையின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது. ஏவுகணை வீச்சு, வான் வழி தாக்குதல் நீடிந்தபடியே இருந்தது. இதனால் அங்கு சிக்கியுள்ள மக்கள், பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் பதுங்கி இருந்தனர்.

Thu, 03/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை