51 மேலதிக வாக்குகளால் திருத்தத்துடன் நிறைவேற்றம் ஆதரவாக 86, எதிராக 35 வாக்குகள்

வாக்களிப்பின் போது 103 எம்பிக்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை

பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் நேற்று (22) சபையில் திருத்தங்களுடன் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டதால், 51 மேலதிக வாக்குகளால் சட்ட மூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து நேற்றைய தினம் வெளிவிவகாரஅமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

விவாதத்தின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணி எம்.பி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் வாக்களிப்பைக் கோரினர்.

இதையடுத்து வாக்களிப்பு நடைபெற்றது. பயங்கரவாத (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்ட மூலத்தை கடந்த 10 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று   நடைபெற்றது. எதிர்க்கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், சி.வி.விக்கிணேஸ்வரன்.குமார் பொன்னம்பலம். எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் இந்த சட்டத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் ஆரம்ப முன்னெடுப்பாகவே இந்த திருத்தங்கள் முன்வைக்கப்படுவதாக ஆளும் தரப்பு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென எதிர்தரப்பு சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. ஆளும் தரப்பு சார்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளித்தார். விவாத்தின் இறுதியில் வாக்கெடுப்பு கோரப்பட்டதால், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது ஆளும் தரப்பு எம்.பிக்களுடன் கூட்டணி கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. எதிரணி சார்பில் அநுர குமார திசாநாயக்க, ரவூப் ஹக்கீம்,ரிசாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்ட த.தே.கூ. எம்.பிக்களும் எதிராக வாக்களித்தனர். வாக்களிப்பின் போது 103 எம்.பிக்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 03/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை