உக்ரைன் போர் 4ஆவது வாரத்தை தொட்டது; மனித இழப்பு அதிகரிப்பு

- ரஷ்ய படைகளுக்கு முட்டுக்கட்டை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நான்காவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் தலைநகர் கியேவ், மரியுபோல், செர்னிஹிவ் மற்றும் கார்கிவ்வில் முற்றுகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யப் படை நகர்புற மையங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது.

மூன்று மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு மேலும் இரண்டு மில்லியன் பேர் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய கியேவ் மீது ஒரு வாரத்திற்கு மேல் குண்டுகள் விழுந்து வருகின்றன. தலைநகரை நோக்கி ரஷ்ய படை முன்னேற முடியாத நிலையில் 15 கி.மீற்றருக்கு அப்பால் இருந்து ஏவுகணைகளை வீசி வருகிறது.

“ரஷ்ய துருப்பினர் எமது வாழ்வை நரகமாக்கியுள்ளனர். மக்கள் உணவு, நீர் அல்லது மின்சாரம் இன்றி இரவு, பகல் நிலத்தடி முகாம்களில் இருந்து வருகிறார்கள்” என்று கியேவ் பிராந்திய தலைவர் ஒலெக்சி குலேபா உக்ரைன் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கிட்டத்தட்ட அனைத்து முனைகளிலும் ரஷ்யப் படை முன்னேற முடியாமல் ஸ்தம்பித்திருப்பதாக பிரிட்டன் இராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

“உக்ரைனின் எதிர்ப்பு சிறந்த முறையில் ஒருங்கிணைந்து இடம்பெற்று வருகிறது” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அனைத்து பிரதான நகரங்கள் உட்பட உக்ரைனின் பெரும் பகுதி தொடர்ந்து உக்ரைனியர் கைகளில் உள்ளது” என்று அது குறிப்பிட்டுள்ளது. “தரை வழியாக முன்னேற முடியாத காரணத்தால் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்துவது குண்டுவீசுவது என ரஷ்யாவின் முயற்சிகள் இப்போது வான் வழி தாக்குதல்களுக்கு மாறியுள்ளது” என்று உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த படையெடுப்பு காரணமாக இதுவரை சுமார் தமது 500 படையினரே கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா கூறிய நிலையில் அது 7,000 ஐ நெருங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு கணித்துள்ளது.

இதேவேளை உக்ரைனில் ரஷ்யா தனது இலக்கை எட்டும் என்றும் மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கம் மற்றும் ரஷ்யாவை துண்டாக்கும் முயற்சிகளுக்கு அடிபணியப்போவதில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மத்திய நிலைப்பாடு பற்றி பேச தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மத்தியில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய புடின், “எதிர்காலத்தில் உக்ரைனின் நாஜி ஆதரவு அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பெற்று ரஷ்யாவை இலக்கு வைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

உக்ரைனின் ஜனநாயக முறையில் தேர்வான தலைவர்களை நவ நாஜி கொள்கை கொண்டவர்கள் என்று தொடர்ந்து கூறி வரும் புடின் அவர்கள் நாட்டின் கிழக்கில் உள்ள ரஷ்ய மொழி பேசுபவர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்.

இதேவேளை அமெரிக்க பாராளுமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் உரையாற்றி இருக்கும் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, உக்ரைனின் வான் தடை வலையம் ஒன்றை உருவாக்குவது பற்றி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். எனினும் இந்தக் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் தெரிவிக்க உள்ளார்.

இந்த உதவியில், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உக்ரைனுக்கு சிறப்பான விதத்தில் பயன்பட்ட ஜாவ்லின் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்ட கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் வழங்குதல் ஆகியவை அடங்கும் என, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ரஷ்ய படையெடுப்புக்கான எதிர்வினை குறித்து ஆலோசிக்க நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்திப்பு ஒன்றை நடத்தினர். நேட்டோ உறுப்பினர் நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காகவும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸுக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fri, 03/18/2022 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை