மாற்று வழிமுறைகளை அரசு கையாளாவிட்டால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும்

அரசாங்கமானது டொலர் கையிருப்பினை உறுதி செய்யும் வகையில் மாற்று வழிமுறைகளைக் கையாளவில்லை என்றால் இந்த நிலைமை மேலும் மோசமடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரு நாட்டு மக்களாக இந்த சவாலினை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தேவையுள்ளது. அதேவேளை இந்த நெருக்கடியினை தீர்ப்பதற்கு அரசாங்கம் கையாளும் வழிமுறைகள் மிக முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசாங்கமானது வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதானது, எமது மக்களிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பை இல்லாமற் போக செய்கிறது.

எவ்விதத்திலாயினும் கடன் தவணைகளில் எவ்வித தாமதமும் ஏற்படுவதனை தவிர்க்கும் அரசாங்கத்தின் குறிக்கோளானது எமது மக்கள் உண்ணக் கூடிய சூழலில் இருக்கிறார்களா என்கிற அடிப்படை கேள்வியை குறைத்து மதிப்பிடுவதாகவே அமைகிறது. இலங்கையிலுள்ள ஆறிற்கும் அதிகமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த சூழ்நிலையினை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 27ம் திகதி கலந்தாலோசனை ஒன்றினை நடாத்தியிருந்தோம்.

இலங்கை உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான பொது கடன் சுமையானது 120% மாக ஒரு பாரிய ஏற்றமாக காணப்பட்டது கடன் கொடுத்தவர்களிற்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது. இது எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான டொலரின் பற்றாக்குறைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் உணவு,மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை குறைத்துமுள்ளது.

இந்த பற்றாக்குறையின் எதிரொலியினை அத்தியாவசிய பொருட்களிற்கான நீண்ட வரிசைகளிலும் தொடர் மின் துண்டிப்பிலும் நாம் கண்டோம். அரசாங்கமானது டொலர் கையிருப்பினை உறுதி செய்யும் வகையில் மாற்று வழிமுறைகளை கையாளவில்லை என்றால் இந்த நிலைமை மேலும் மோசமடையும்.

முழுமையாக கடன் தவணைகளை மீள் செலுத்துவதற்கு டொலரினை தேக்கி வைத்திருக்கும் மத்திய வங்கியின் கொள்கையானது, உள்நாட்டில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் கையிருப்பை குறைகின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலைமையானது பாரிய பொருளாதார தாக்கங்களை இலங்கை மக்கள் மத்தியில் கொண்டுவருவதோடு நீண்டகால பொருளாதார பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.

ஆனால் மறுபுறம் இலங்கையின் பிணை முறி வைத்திருப்பாளர்களுக்கு இது பாரிய இலாபத்தினை கொடுக்கிறது. இலங்கை இந்த பொருளாதார நெருக்கடியின் பாதக விளைவிலிருந்து வறிய மக்களை பாதுகாப்பதற்கான உடனடி வழிமுறைகளை கையாள வேண்டுமென நாங்கள் உடன்பட்டோம். இதிலே பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கும் நிலையான தீர்வுகளை கண்டடைவதற்குமான தேசிய பொருளாதார கொள்கைகளில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இணங்கினோம்.

இந்த அரசியல் தலைவர்கள் குழுவானது, இலங்கை மக்களுக்கு நிலையான தீர்வுகள் ஊடாக நீதியை நிலை நாட்டுவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து இணைந்து செயலாற்ற இணங்கினோம் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை