வட கொரியா மூன்றாவது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை வீச்சு

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையின் கீழ் மற்றுமொரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக செயற்பட்டு கடலில் சுமார் 1,000 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் இலக்கை தாக்கியதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை பற்றி அறிவிப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த வகை ஏவுகணை பலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் நீண்ட நேரம் அவதானிப்பை தவிர்க்க முடியுமானதாக உள்ளது.

இந்த நிகழ்வுக்கு கிம் பங்கேற்றிருப்பதும் வட கொரியாவின் தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பது புத்தாண்டு இலக்காக அந்நாட்டு தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் இந்த சோதனை அதற்கு உதவுவதாக உள்ளது.

கடந்த வாரம் வட கொரிய இவ்வாறான ஒரு சோதனை மேற்கொண்டதற்கு அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் நிலையிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் வட கொரியா தனது அழிவு செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அறிவிப்பை தென் கொரியா குறைத்து மதிப்பிட்டபோதும், முந்தைய சோதனையை விடவும் இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரிவதாக குறிப்பிட்டுள்ளது. பலிஸ்டிக் ஏவுகணைகள் போலன்றி பூமியின் மேற்பரப்பிற்கு நெருக்கமாக பக்கவாட்டில் பயணிக்க முடியுமான இந்த ஏவுகணை மிகக் குறிகியகால பறத்தலில் இலக்கைத் தாக்கக் கூடியதாக உள்ளது.

தவிர ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாக உள்ளது. இந்த அம்சங்களால் இந்த ஆயுதங்களை அவதானிப்பது மற்றும் இடைமறிப்பது கடிமானதாக உள்ளது.

அமெரிக்க மற்றும் சீனா உட்பட ஒருசில நாடுகளே இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை