தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து ஆய்வு

தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் குறித்த ஆய்வொன்றை நடத்த மாநில அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது. கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி வரையிலான நிலவரப்படி, 18,937 குடும்பங்களைச் சேர்ந்த 58,668 இலங்கைத் தமிழர்கள் முகாம்களிலும், 13,553 குடும்பங்களைச் சேர்ந்த 34,123 பேர் முகாம்களுக்கு வெளியிலும் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் வாழும் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்குவது தொடர்பிலும், எத்தனை பேர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்தும் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

தமிழக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு, கடந்த வாரம் முதல் முறையாகக் கூடி குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

சுதந்திரத்தின் பின்னர், இந்தியாவுக்கு வந்த இலங்கையர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களில் எத்தனைப் பேர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் போன்ற தகவல்களை இந்திய மத்திய உள்துறை அமைச்சு மற்றும் தமிழக அரசாங்கம் ஆகியவற்றிடம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகளின் பின்னர், இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்காக, 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம், மாநில அரசு கோரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை