53,177 பட்டதாரிகளுக்கு ஜன. 03ல் நிரந்தர நியமனம்

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு

 

அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53,177 பட்டதாரிகளும் ஜனவரி 03ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,  மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இப் பட்டதாரிகளுக்கான அடிப்படைச் சம்பளமாக 31,490 ரூபா வழங்கப்படுவதுடன் கொடுப்பனவுகளுடன் அவர்களுக்கான சம்பளம் 41,490 ருபாவாக வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளில் 700 பேரின் நிரந்தர நியமனத்துக்கான கடிதம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னரே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அவர்களது ஒருவருட பயிற்சி மார்ச் மாதத்தில் நிறைவடைவதே அதற்குக் காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 07இல் உள்ள பொது நிர்வாக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

நிரந்தர நியமனம் வழங்கப்படும் பட்டதாரிகள் அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகங்களின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தேசிய பல்கலைக்கழகமொன்றில் பட்டம்பெற்றுக் கொண்டுள்ள 45 வயதுக்குக் குறைவான பட்டாதாரிகளுக்கே இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதோடு அதில் 16,000 பேரின் மேன்முறையீடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர நியமனம் பெற்றுள்ளவர்களுள் 21ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டு வருகிறது, என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை