மக்களுக்கான நிவாரணத்தை ஜீரணிக்க முடியாத எதிரணியினர்

-நிதியமைச்சர் தூரதிருஷ்டியுடனான செயலுக்கு பாராட்டு

 

மக்களுக்கு வழங்கிய நிவாரணப் பொதியை எதிரணியால் ஜீரணிக்க முடியாதுள்ளது. இந்த சலுகையின் காரணமாக பணவீக்கம் ஏற்படுமென எதிரணி குற்றஞ்சாட்டுவதற்கு இதுவே காரணம் என தெரிவித்த அமைச்சர் ரோஹித  அபேகுணவர்தன, மக்களுக்கு நன்மை கிடைக்கும்போது எதிரணியினர் குரோத மனப்பான்மையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தூரநோக்குடன் செயற்படுவதால் தான் நிவாரண பொதியை வழங்க முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அவர்,அமைச்சர் ஒருவரை நீக்குவது புதிய விடயமல்ல எனவும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கூட அமைச்சர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஊடக மாநாட்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அரச ஊழியர்கள் மாத சம்பளம் பெறுகின்றனர்.பொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது.ஓய்வூதியம் பெறுவோர் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் அறுவடை குறைந்தால் நஷ்டஈடு வழங்கவும் மனைப்பொருளாதாரத்தை மேற்கொள்ளவும் உதவி வழங்கப்பட உள்ளது. தனியார் துறையின் சம்பளத்தையும் அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனது மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனமொன்று சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

24 வருடங்களாக ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. அதற்கு முடிவு கட்ட எமது அரசு நடவடிக்கை எடுத்தது.அவர்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கும்.

பசில் ராஜபக்ஷவின் தற்காலிக பொதி அழிவின் ஆரம்பமென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இவ்வாறு நிவாரணம் வழங்கினால் பணவீக்கம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஊக்கம் வழக்கி சம்பளம் அதிகரிக்க அழுத்தம் கொடுத்ததால் பணவீக்கம் வராதா? மக்களுக்காக நிவாரணம் வழங்கினால் பணவீக்கம் வருகிறதாம்.இவர்கள் குரோத மனப்பான்மையுடன் செயற்படுகின்றனர். பொருளாதாரம் முன்னேறி வருகிறது. சுற்றுலா துறை முன்னேற்றம் கண்டு வருகிறது. தடுப்பூசி வழங்கும் நாடுகளிடையே இலங்கை முன்னிலையிலுள்ளது.

03 ஆம் தடுப்பூசி ஏற்றுவதற்கு வர மக்கள் அஞ்சுகின்றனர். எதிரணி அவர்களை பயமுறுத்தி வருகிறது. தடுப்பூசி வழங்கி தொற்று பரவுவதை தடுத்ததால் நாட்டை திறக்க முடிந்தது.

மக்களுக்கு வழங்கிய நிவாரண பொதியை எதிரணியால் ஜீரணிக்க முடியாதுள்ளது.மக்களின் நிலைமை குறித்து சிந்தித்து அரசாங்கம் செயற்படுகையில் அதனை எதிரணி விமர்சிக்கிறது.சகல சவால்களையும் 2022 இல் வெல்வோம்.பசில் ராஜபக்‌ஷ தூரதிருஷ்டியுடன் செயற்படுகிறார்.பல சவால்கள் இருந்தாலும் அவற்றை வென்று பொருளாதாரத்தை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதனால் தான் இந்த நிவாரண பொதியை வழங்க முடிந்துள்ளது.

சுசில் பிரேம் ஜெயந்த்தை நீக்கியது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகிறது. அமைச்சர் ஒருவரை நீக்குவது புதிய விடயமல்ல.

சகல அரசுகளிலும் இவ்வாறு நடந்துள்ளது. பிரேமதாசவின் காலத்தில் காமனி திசாநாயக்க,லலித் அதுலத் முதலி போன்றவர்கள் நீக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அநுர பண்டார நாயக்க,மங்கள சமரவீர ,சிறிபதி சூரியாரச்சி போன்றவர்கள் நீக்கப்பட்டனர்.

நீக்கியது சரியல்ல என சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 2017 இல் அவர் அருந்திக்க பெர்ணான்டோவை நீக்கியது அவருக்கு மறந்து விட்டதா? அவர் தனது ஆட்சியிலும் நீக்கியுள்ளார்.

அரசாங்கத்தை பாதுகாக்கும் பொறுப்பு பொதுஜன பெரமுனவுக்குள்ளது. அரசுக்குள் குழுக்கூட்டத்தில் எந்த விமர்சனமும் முன்வைக்கலாம். குழுக்கூட்டங்களிலும் எம்மை சந்திக்கும்போது எதுவும் போசாதவர்கள் மைக் ஒன்று கிடைத்ததும் எதனையும் பேசுகின்றனர். கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை