பட்டங்கள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்

தரத்தை உறுதி செய்யுமாறு வேண்டுகோள்

கொழும்பு வீதிகளெங்கும் பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் கல்வி நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றின் தரத்தை உறுதி செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் அவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரும் கல்வி அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது பாடசாலைகளின் பெயர்ப் பலகைகளை அமைப்பதற்கு கூட போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கல்வி அமைச்சானது எதிர்காலத்தில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் சபையில் தெரிவித்த அவர், சர்வதேச நிதி உதவிகளுடன் கல்வியமைச்சை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கொவிட் தொற்று காரணமாக எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என்பதை நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ புரிந்து கொண்டே வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரேரணைகள் இல்லை. குறிப்பாக கல்வி அமைச்சை எடுத்துக்கொண்டால் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற தெளிவு இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே பார்க்க முடிகிறது.

உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியானது 80வீதம் வரை வெளிநாடுகள் மூலம் கிடைக்கும் நிதியாகும்.

எனினும் பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக உள்நாட்டு நிதியே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கூடிய தொகையை கிராம தேர்தல் தொகுதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை போன்ற நாட்டுக்கு, அடிப்படை தேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி பொருளாதார பிரச்சினையில் இருந்து மீளமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை