தோட்டத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த காலம் இன்றில்லை

மலையகம் கல்வித்துறையில் பெரும் முன்னேற்றம் -சபையில் மருதபாண்டி ராமேஸ்வரன் பெருமிதம்

 

15 இலட்சம் மக்கள் தோட்டத்துறை தொழிலை மட்டுமே நம்பியிருந்த காலம் மாற்றம் பெற்று தற்போது மலையகம் கல்வித்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என இ.தொ. கா. எம்.பி மருதபாண்டி ராமேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மலையக கல்வி வீழ்ச்சியுற்ற காலம் மாறி தற்போது பல்வேறு துறைகளிலும் படித்த மலையக இளைஞர், யுவதிகள் சிறப்பாக பிரகாசிப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே கல்வித் துறை உள்ளிட்ட மலையகத்தின் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைந்தது என தெரிவித்த அவர், அப்போதிருந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்று தற்போதைய கல்வி அமைச்சரும் மலையக கல்வித்துறைக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கையுண்டு என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,மலையக கல்வியில் ஒருகாலத்தில் நாம் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும் இன்று அந்த நிலைமைகள் மாற்றம் பெற்றுள்ளன. பல துறைகளில் எமது சமூகம் தற்போது வீறுநடை போட கல்வியே காரணம். அதற்கு முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட எமது தலைவர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டமே காரணமாகும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை