பிராந்தியத்தின் கல்விக்கான கேந்திர மையமாக இலங்கை

மாற்றியமைக்க அவுஸ்திரேலியா உதவி வழங்கும்

ஜனாதிபதியை சந்தித்த ஆஸி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ் உறுதியளிப்பு

இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடம் உறுதியளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக திருமதி அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அலுவலகத்தில் (20) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக திருமதி கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்தார். பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை திருமதி அன்ட்ரூஸ் பாராட்டினார்.

11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி , போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் திருமதி ஆண்ட்ரூஸ் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, அமைச்சின் ஆலோசகர் லாச்லன் மெக்நோட்டன், முதல், உதவிச் செயலாளர் (சர்வதேச பிரிவு) எடம் மேயர், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை