பண்டிகைக்காலங்களில் போலி நாணயத்தாள்கள்

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை  நடவடிக்கையின் போது போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் 5,000 ரூபா, 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அச்சடிக்க பயன்படுத்திய கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் சிலரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது அதுதொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிக பெறுமதியான மேற்படி போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாகவும் பண்டிகைக்காலத்தில் பல்வேறு வகையில் அதனை உபயோகிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் மக்கள் நகர்களுக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவ்வாறு போலி நாணயத்தாள்கள் கைமாறுவதற்கு இடமுண்டு.இக்காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் அதுதொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமென்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு போலி நாணயத்தாள்களை அடையாளம் காண்பதற்கு அதில் பொறிக்கப்பட்டுள்ள விசேட அடையாளம் அச்சடிக்கப்பட்டுள்ள கடதாசியின் தன்மை, பாதுகாப்பு நூல், நாணயத்தாள்களின் வர்ணம் ஆகியவற்றை அவதானித்தால் போலி நாணயத்தாள்களுக்கு ஏமாறுவதைத் தவிர்க்க முடியும். அவ்வாறான நாணயத்தாள்கள் புழக்கத்தில் காணப்படும்போது அதுதொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அதுதொடர்பில் அறிவிக்க முடியமென்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை