இறுதி சடங்கில் பங்கேற்க இராணுவ தளபதி பயணம்

ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (10) அதிகாலை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவிலுள்ள தனது சக தலைவரின் துயரமான மறைவு குறித்து கேள்வியுற்று, ஊடகங்களுக்கும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் புதன்கிழமை இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்றுக் காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. இராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இராணுவ அதிகாரிகள் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

அங்கு நேற்று மாலை 4.00 மணிக்கு ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் திருமதி மதுலிகா ராவத்தின் உடல்கள் ப்ரார் சதுக்கத்தில் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

Sat, 12/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை