சிலிண்டர்களுக்கு புதிய வால்வு பொருத்தல்

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள வால்வுகளை (Valve) மாற்றி புதிய வால்வுகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், சுங்கப் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் புதியவால்வுகளை பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே, தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, இரண்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை பரிசோதிக்க இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது.

Fri, 12/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை