அமைச்சர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு

அமைச்சர் வாசு எச்சரிக்கை

நீர் கட்டணங்களைத் தொடர்ச்சியாக வழங்கத் தவறியுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பெரும்தொகை நீர்க்கட்டணத்தை நீர் வழங்கல் அதிகார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் 40க்கும் மேற்பட்டோர் நீருக்கான கட்டணமாக நீர் வழங்கல் சபைக்கு சுமார் 1 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வழங்கல் சபைக்கு நீர்க் கட்டணமாக அதிகளவு நிதியைச் செலுத்த வேண்டிய நபராக மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரொருவர் உள்ளதுடன் அவர் 18 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் ஒருவர் நீர்க்கட்டணமாக நீர் வழங்கல் சபைக்கு 45 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதுடன் அவ்வாறு நீர் கட்டணம் செலுத்தாதவர்களுள் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறெனினும் அவர்கள் இருவரும் உபயோகித்த உத்தியோகபூர்வ இல்லத்தை தற்போது வேறு இரண்டு அமைச்சர்கள் உபயோகித்து வருகின்றனர்.

அது தொடர்பில் அவர்கள் நீர் வழங்கல் அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை நீர்க்கட்டணங்களைத் தொடர்ச்சியாக வழங்கத்தவறும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 12/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை