கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தினால் எதிர்ப்பு

ஒருபோதும் துணைபோக மாட்டோம் என்கிறார் ஹரீஸ் எம்.பி

முஸ்லிம்களின் இருப்பை கிழக்கில் கேள்விக்கு உட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம். கிழக்கு பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களின் நலனில் எப்போதும் கரிசனை கொண்டு ஒற்றுமையாக செயற்பட்டு கிழக்கின் அபிவிருத்திகள்,  உரிமைகள் விடயங்களில் ஒற்றுமையாக பயணிக்க தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசாங்கம் வெளிநாட்டு நாணய நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் புதிய கொள்கைத் திட்டங்ககளை வகுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல கிராமிய மட்டத்திலிருந்து பொருளாதார மேம்பாட்டை ஆரம்பிக்க நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டின் வரவு -செலவுத் திட்டத்தில் பாரியளவிலான நிதியை ஒதுக்கியுள்ளார். கடந்த காலங்களில் இவ்வாண்டு ஒதுக்கப்பட்டதுபோன்று கிராமிய பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு பாரிய நிதியொதுக்கீடுகள் இடம் பெற்றிருக்கவில்லை.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் இந்த முயற்சியானது நாடும், நாட்டு மக்களும் முன்னேறவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்துள்ளது. சிலர் அரசியலுக்காக பல கதைகளை கூறினாலும் திட்டங்களை உள்ளார்ந்து கவனிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எமது அண்மைய நாடான பங்களாதேஷ் முன்னேற்றத்தை நோக்கி செல்ல காரணமாக அந்த நாட்டின் கிராமிய பொருளாதார கொள்கையே காரணம்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாக்களிலும் சாய்ந்தமருது மக்களுக்கும் அதிக தொகைகளை ஒதுக்கி உற்பத்தி திறன் மிக்க பிரதேசமாக சாய்ந்தமருதை மாற்ற தயாராக உள்ளேன். புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இடையில் திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். பிந்தினால் நிலையியல் கட்டளை சட்டம் இடம்கொடுக்காது. ஆகவே எம்மால் அதனை பூரணமாக செய்ய முடியாமல் போகும் என்றார்

 

Mon, 12/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை