விமானங்கள் இரத்தாகும் சம்பவங்கள் தொடர்வு; பண்டிகைக் கால பயணிகள் நிர்க்கதி

கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட சம்பவங்கள் நேற்று தொடர்ச்சியாக பதிவாகியுள்ளன. இது பண்டிகைக் காலத்தின் பயணிகளுக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி நேற்று திங்கட்கிழமை 1,400க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்கா மற்றும் சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக விமானப் பயணங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப் பணியாளர்களிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அல்லது தனிமைப்படுத்தல்கள் காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நாட்டுக்குள் வந்தவர்களின் சிலரிடம் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து தென் கொரிய விமானங்களுக்கு அடுத்த இரண்டு வராங்களுக்கு ஹொங்கொங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான கிறிஸ்மஸ் வார இறுதி நாட்கள் தொடக்கம் உலகெங்கும் இதுவரை 8,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வேகமாகப் பரவக்கூடிய ஒமிக்ரோன் திரிபுக்கு மத்தியில் உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் திரிபு மிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டபோதும் அது வேகமாக பரவிவருவது விஞ்ஞானிகளின் அவதானத்தை பெற்றுள்ளது.

இதில் நேற்று ரத்தான பெரும்பாலான விமானங்கள் சீன நிறுவனங்களை சேர்ந்தவையாகும். இதில் சைனா ஈஸ்டன் நிறுவனத்தில் 368 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதோடு எயார் சைனா தனது 141 விமானங்களை ரத்துச் செய்துள்ளது.

பீஜிங் மற்றும் சங்காய் விமான நிலையங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 300 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒமிக்ரோனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது விமான ஊழியர் குழுவை நேரடியாக பாதிக்கும், விமானத்தை இயக்கும் பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என யுனைடெட் விமான சேவை நிறுவனம் முன்பே எச்சரித்திருந்தது. மேலும், ரத்தான விமானங்களில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், விமான நிலையங்களுக்கு வருவதற்கு முன்பே அவர்களை அழைத்து பேசி வருவதாகவும் கூறியுள்ளது யுனைடெட் நிறுவனம்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தற்போது ஒமிக்ரோனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிட்டத்தட்ட 54 இலட்சம் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

இதுவரை உலக அளவில் 27.9 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tue, 12/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை