மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு தனியான குடிநீர் திட்டம் அவசியம்

வாசுதேவவிடம் வேலுகுமார் வலியுறுத்து

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக விஷேட குடிநீர்த் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அம் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி எம். வேலுகுமார் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் குடிநீர் உள்ளிட்ட பொது வசதிகள் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. அத்தகைய விடயங்களில் தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர் வளங்கள் அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: தேசிய பிரவாகத்திலிருந்து பெருந்தோட்ட பகுதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தோட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள் காணி பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றை இதில் குறிப்பிட முடியும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மலையக மக்களின் நலன் தொடர்பில் குரலெழுப்பி வரும் ஒருவர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் அவர் தமது கருத்துக்களை துணிவாக தெரிவித்து வந்துள்ளார்.

அதற்கிணங்க பெருந்தோட்டத்துறை மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு கொள்கை ரீதியான தீர்மானத்துடன் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நீர் வழங்கல் திட்டம் என நாட்டின் கிராமப்புறங்களிலும் ஒரு சீட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த திட்டத்தில் தோட்டப்பகுதிகளும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை