அமெரிக்காவுக்கும் பரவியது ஒமிக்ரோன் கொரோனா திரிபு

அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் திரிபு சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் மீதான அச்சம் அதிகரிதுள்ளது.

தென்னாபிரிக்காவில் இருந்து கடந்த நவம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா திரும்பி ஏழு நாட்களின் பின் கலிபோர்னியாவைச் சேர்ந்த முழுமையாக தடுப்பூசி பெற்ற ஒருவரிடமே முதலாவது வைரஸ் திரிபு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர் காலத்தில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடும் அமெரிக்காவின் மூலோபாய திட்டம் பற்றி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கண்டிப்பான நோய்ப் பரிசோதனை விதிகளை அறிவிக்கவும் வெள்ளை மாளிகை திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து வந்தவர்களின் பெயர் பட்டியலை விமான சேவைகளிடம் இருந்து அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புக்கான நிலையம் கேட்டுள்ளது.

ஒரு வரத்திற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் திரிபு தற்போது உலகின் பல டஜன் நாடுகளுக்கும் பரவியுள்ளது.

ஒமிக்ரோன் திரிபு நோயெதிர்ப்பு சக்தியை தவிர்த்து ஊடுருவும் தன்மையைக் கொண்டிருந்தபோதும் தற்போதுள்ள தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்பில் இருந்து பாதுகாக்க வாய்ப்பு உள்ளதாக ஆரம்பக்கட்ட தரவுகள் காட்டுவதாக தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் தற்போது ஒமிக்ரோன் திரிபு ஆதிக்கம் செலுத்தி வருவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 8,500 தினசரி தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முந்தைய தினத்தில் 4300 தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் அது ஒருநாளில் இரட்டிப்பாகியுள்ளது.

ஒமிக்ரோனின் தொற்றுத்தன்மை பற்றிய தரவு சில நாட்களில் கிடைக்கப்பெறும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கொவ் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் திரிபுக்கு எதிராக சுமார் 56 நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஒமிக்ரோன் திரிபை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மேலும் பல ஆசிய நாடுகள் இறங்கியுள்ளன. வியட்நாம், 7 ஆபிரிக்க நாடுகளுக்குத் தற்காலிகப் பயணத்தடை விதித்துள்ளது. மலேசியா 8 ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச பயணங்களுக்கான தடையை நீக்கிய இந்தியா அந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

இன்று முதல் தென் கொரியாவுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் 10 நாள் தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் அது பொருந்தும்.

அங்கு ஒரேநாளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் கடந்த புதன் இரவு அறிவிக்கப்பட்டன.

ஐவருக்கு ஒமிக்ரோன் வகை வைரஸ் தொற்றியுள்ளதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஒமிக்ரோன் வைரஸ்; பரவல் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான ஜனாதிபதி மூன் ஜே இன்-னின் திட்டத்திற்கு அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிப் பயணத்தடம்வழி வரும் பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாய்லாந்து, ஆபிரிக்கப் பயணிகள் 780 பேரைத் தேடி வருகிறது. அவர்கள் கடந்த மாதம் நடுப்பகுதியிலிருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் என்று அது கூறியது. அவர்களிடம் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தாய்லாந்து, எட்டு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.

மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம், கொவிட்-19 தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

அதுபற்றி விவாதிக்கும் நேரம் வந்துவிட்டதாக, ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் கூறினார்.

இருப்பினும், உறுப்பு நாடுகள், தனித்தனியாகவே அந்தக் கட்டாய விதிமுறையை நடைமுறைப்படுத்த முடியும்.

அடுத்த ஆண்டு பெப்ரவரியிலிருந்து ஆஸ்திரியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம். அதனைப் பின்பற்றுவது குறித்து ஜெர்மனி பரிசீலித்துள்ளது.

கிரீஸ், 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரோன் வகை திரிபுக்கு எதிரான தடுப்பாற்றலைக் கொடுக்குமா என்பதை உறுதிசெய்வதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

என்றாலும், வைரஸ் தொற்றுக்கு எதிரான தற்காப்பை வலுப்படுத்துவதற்குப் பல நாடுகள் அவற்றின் தடுப்பூசித் திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை