கிறிஸ்மஸ் வாரத்தில் உலகெங்கும் 5,900 விமானப் பயணங்கள் இரத்து

உலகெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 1,500க்கும் அதிகமான விமானப் பயணங்கள் கைவிடப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டிய பயணங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளன.

இதன்படி கிறிஸ்மஸுக்கு முந்திய தினம், கிறிஸ்மஸ் தினம் மற்றும் அதற்கு பிந்திய தினங்களில் உலகெங்கும் சுமார் 5,900 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அது தொடர்பான தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.

சீனா மற்றும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமையும் தொடர்ந்து இடையூறுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போதுமான ஊழியர்கள் இல்லாதது மற்றும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு ஆகியவை விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதற்கான காரணங்களாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

விமானப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பது விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதற்கு காரணம் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

அமெரிக்காவுக்குச் செல்லும் அல்லது அமெரிக்காவிலிருந்து புறப்படும் 450 விமானங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரத்தாகியுள்ளதாக ப்ளைட் அவேர் நிறுவன தரவு கூறுகிறது.

இதில் சீனாவைச் சேர்ந்த ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ என்ற சீன விமான சேவை நிறுவனம் நேற்று ஒரே நாளில் அதிகபட்சம் 350க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது.

லண்டன் நகரத்தில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை 2,400 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. 11,000 விமானப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை மேலும் 8,000க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டன. 2,800 விமானப் பயணங்கள் ரத்தாயின.

Mon, 12/27/2021 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை