10,000 வீடுகள் அமைக்கும் திட்டம் அடுத்த 03 மாதங்களில் ஆரம்பம்

பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன்

 

மலையகத்தில் இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று கட்டங்களாக அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 3,325 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 695 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் நாலாயிரம் வீடுகளை நிர்மாணித்துள்ளதாக தெரிவித்த அவர், ஐந்து வருட காலத்தில் செய்ய வேண்டியதை இரண்டு வருடத்தில் முடிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் தரிசு நிலங்களை அங்குள்ள இளைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்: மலையக மக்கள் கம்பெனிகளின் அடக்கு முறையின் கீழேயே வாழ்கின்றார்கள். கல்வி மூலமே அந்த அடக்குமுறைக்கு பதில் கொடுக்க முடியும். அதனைக் கருத்திற் கொண்டு நாம் 2005 மில்லியன் ரூபா செலவில் சுமார் வகுப்புக்களை ஆரம்பித்துள்ளோம். அதன் மூலம் பெருமளவு மாணவர்கள் நன்மை பெற்று வருகின்றனர்.

கடந்த இரண்டு வருட காலங்களாக மலையகப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கான ஆஸ்பத்திரி வசதிகள் சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்துவதற்காக நாம் 122.8 மில்லியன் நிதியை செலவிட்டுள்ளோம். 22,000 நிவாரணப் பொதிகளை மக்களுக்கு வழங்கி யுள்ளோம்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள நான் விரும்பினேன்.

எனினும் அவர்கள் துரதிஷ்டவசமாக இந்த சபையில் இல்லை.

எமது அமைச்சுக்கு இம்முறை 977 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7 பேர்ச் காணியை 10 பேர்ச் காணியாக அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் அரைகுறையாக விடப்பட்ட திட்டங்களை நாம் தற்போது நிவர்த்தி செய்து வருகின்றோம். அதற்கிணங்க நிறைவு செய்யப்படாத வீதிகள், பாடசாலைகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதுடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம். நாம் தோட்ட வீடமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற போது இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 699 வீடுகள் மட்டுமே மக்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன ஏனைய வீடுகள் முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையிலேயே காணப்பட்டன. 3300 வீடுகளில் 1936 வீடுகளுக்கு நாம் நீர், மின்சார வசதிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். இந்த வருடத்தில் நாம் 4000 வீடுகளை நிர்மாணித்துள்ளதுடன் ஐந்து வருடங்களில் செய்ய வேண்டியதை நாம் இரண்டு வருடங்களில் நிறைவுசெய்து ள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 12/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை