சூடான் பழங்குடியினர் மோதல்; 24 பேர் பலி

சூடானின் மேற்கு டாபூர் பிராந்தியத்தில் அரபு மற்றும் அரபு அல்லாத பழங்குடியினருக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாமில் இருவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பின்னேரம் ஏற்பட்ட பணப்பிரச்சினை ஒன்றே மோதலாக வெடித்திருப்பதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான இணைப்புப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதில் மக்கள் பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் அரபு போராளிகள் முகாம் மீது தீ வைத்து, கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பதற்றம் கொண்ட பிராந்தியத்தில் நீடிக்கும் மோதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் இங்கு அரபு மற்றும் அரபு அல்லாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலப் பிரச்சினையில் 17 பேர் கொல்லப்பட்டு மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

சூடானின் அரபு ஆதிக்க அரசின் ஒடுக்குமுறைக்கு முகம்கொடுப்பதாகக் கூறி 2003 ஆம் ஆண்டு டாபூரில் ஆயுதப் போராட்டம் வெடித்தது தொடக்கம் அந்தப் பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

Tue, 12/07/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை