அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: உயிரிழப்பு 100 ஐ தாண்டுமென அச்சம்

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் கட்டடங்கள் சேதமடைந்து பேரழிவு ஏற்பட்டிருப்பதோடு 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கிய இந்த சூறாவளியில் கென்டக்கியில் 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையைச் சேர்ந்த பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு 100 தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

மேய்பீல்ட் நகரில் இருக்கும் இந்த தொழிற்சாலையின் இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையை சூறைக்காற்று நேரடியாகத் தாக்கியுள்ளது.

சுமார் 110 தொழிலாளர்களில் 40 க்கும் அதிகமானவர்கள் காப்பற்றப்பட்டபோதும் ஏனையவர்கள் உயிரிடன் காப்பாற்றப்படுவது அதிசமான ஒன்றாக இருக்கும் என்று கென்டக்கி ஆளுநர் அன்டி பேஷியர் குறிப்பிட்டார்.

மேய்பீல்டில் இருக்கும் பொலிஸ் நிலையம் இடிந்து தீயணைப்பு பிரிவு உபகரணங்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் நிர்வாகத்தினர் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு கவுண்டிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் நீர் இன்றி உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பருவநிலைப் பேரிடராக இருக்கலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். பேரிடர் மேலும் மோசமடைந்ததற்குப் பருவநிலை மாற்றம் காரணம் என்றார் அவர்.

இந்த சக்திவாய்ந்த சூறாவளி தாக்குதல்களுக்கு கென்டக்கி தவிர ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி மற்றும் டென்னிஸி ஆகிய 4 மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிஸி மாநிலங்களிலும் சூறாவளி தாக்குதலால் மக்கள் பலியாகி உள்ளனர். கென்டக்கியில் மட்டும் 3 இலட்சம் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். பலர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இல்லினாய்ஸ் மாநிலத்தில் அமேசான் கிடங்கில் கோரப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்த 6 பேர் பலியானார்கள். அமெரிக்காவை தாக்கிய மிகப்பெரிய சூறாவளிகளில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் வரலாற்றில் மிகப்பெரிய சூறாவளியாக மாறும் வாய்ப்புகளும் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளி வேகமாக பயணித்து 5 மாநிலங்களை தாக்கி உள்ளது. 400 கி.மீ வரை இந்த சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளது. கடைசியாக 1925இல் அமெரிக்காவை தாக்கிய சூறாவளி 355 கி.மீ தூரம் சென்றது. அதன்பின் இப்போதுதான் சூறாவளி ஒன்று இவ்வளவு தூரம் பயணித்துள்ளது. இதனால் அமெரிக்காவை தாக்கிய நீளமான சூறாவளிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் 1925இல் 747 பேர் பலியாகினர். 2011இல் அதிகபட்சமாக 800 பேர் உயிரிழந்திருந்தனர்.

Mon, 12/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை