பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் சீனா-அமெரிக்கா இடையே இணக்கம்

சீனாவும் அமெரிக்காவும் பருவநிலை மாற்றத்தை மெதுவடையச் செய்வதற்கு இணைந்து செயல்படக் கூட்டுப் பிரகடனத்தை அறிவித்துள்ளன. சிஓபி26 உச்சநிலை மாநாட்டில் இந்த எதிர்பாராத அறிவிப்பு இடம்பெற்றது.

அண்மைக் காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இருநாடும் இணைந்து ஒரு அரிய உறுதிப்பாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயல்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன. அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பருவநிலை பிரச்சினைகளை தவிர்க்க, தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக உலக வெப்பநிலை 1.5 செல்சியஸிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்தனர்.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உலக வெப்பநிலை உயர்வை ஒன்றரை பாகை செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவது குறித்துக் கடந்த சில தினங்களாக மாநாட்டில் பேசப்பட்டது.

பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஜோன் கெர்ரி, இரு நாடுகளையும் சேர்ந்த பணிக்குழு அடுத்த ஆண்டின் முதற்பாதியில் சந்திக்கும் என்று கூறினார்.

பருவநிலை நெருக்கடியைக் கையாள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளில் பணிக்குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.

அமெரிக்காவும் சீனாவும் உலகிலேயே மிக அதிகமான கரிமத்தைப் பயன்படுத்துவதால் அவற்றின் இணக்கம் பருவநிலை மாநாட்டில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறுதிப்பாட்டில், மீத்தேன் உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, மற்றும் கார்பன் அற்ற சூழல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்கு பின்னர் க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் சிஓபி26 மாநாடு பருவநிலை பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு முக்கிய மாநாடு. இந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்க சுமார் 200 நாடுகள் தங்களின் திட்டங்களை வழங்க வேண்டும். சிஓபி26 மாநாட்டில் நாடுகள் ஒப்புக் கொள்ளும் விடயங்கள் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை