சிரியா சென்று ISIS அமைப்பில் இணைந்தோராலேயே தாக்குதல்

புலனாய்வு விசாரணைகளில் தகவல் என்கிறார் சரத் வீரசேகர

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் வெளிவந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை குழப்பும் வகையில் எதிரணி எம்.பிகள் பொய் கதைகளை தெரிவித்து வருகின்றனர்.

சஹ்ரானின் மனைவி ஹாதியா வழங்கிய வாக்குமூலத்தில் புலனாய் அதிகாரிகள் எவரும் சஹ்ரானை அவரது வீட்டில் சந்தித்ததாக குறிப்பிடவில்லையென தெரிவித்த அவர், புலனாய்வு அதிகாரிகளுக்கும் சஹ்ரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது உறுதியாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நாட்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2016/17 காலப்பகுதியில் இலங்கையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தது தொடர்பாக விஜேதாச ராஜபக்ஷ கடந்த ஆட்சியில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டிருப்பவர்கள் சிரியாவில் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் என்பது உறுதியாக இருக்கின்றது. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 2000ற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 200க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்காக விசாரணைகள் நடைபெறுகிறது. இந்த இந்த நிலையில் ஜனாதிபதி விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்றார்.

பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்டுத்தி பொய்த் தகவல்களை தெரிவித்து, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணைகளை குழப்ப வேண்டாமென்று கோருகிறோம்.விசாரணை முறையாக நடைபெற்றுக்கொண்டு செல்வதை குழப்ப இவ்வாறான பொய்க் கதைகளை தெரிவித்து விசாரணைகளை குழப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை