ஒளி பிறக்கும் தீபத்திருநாளை வழி பிறக்கும் நாளாக வரவேற்போம்

-கடற்றொழில்- அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

ஒளி பிறந்து, இருள் அகன்ற தீபாவளித்திருநாளை தேசமெங்கும் வழி பிறக்கும் நம்பிக்கை பெருநாளாக வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அறம் வெல்லும், அநீதி தோற்கும் என்பதே இதுவரைகால மனிதகுல வரலாறு! இருண்ட  யுகத்தில் இருந்து மீள நிமிர்ந்து வரும் தமிழ் மக்களின் வாழ்விலும் நித்திய ஒளி வீச்சின் வருகை நிகழ்ந்தே தீரும்.

ஆனாலும்,. அக்கறையும் அனுபவமும் நிறைந்த ஆற்றல் மிக்கவர்களின் அறிவாயுதம் ஒன்றே தேசிய நல்லிணக்க வழி நின்று எமது மண்ணில் மாற்றங்களை உருவாக்கும்.

மாறாக, அறம் மறந்த அரசியலோ, விவேகமற்ற வெற்று வீரப்பேச்சுகளோ, திட்டமில்லாத வெறும் கூட்டுத்தீர்மானங்களோ அநீதிகளை சந்தித்த எமது மக்களின் வாழ்வில் அறம் வெல்ல ஒருபோதும் உதவாது.

கொடிய தொற்று நோயினால் உலக மக்களே இன்று தவிக்கையில்,..

வல்லரசு நாடுகளே அதன் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கையில், வளர்முக நாடான இலங்கைத்தீவும் இடர் சூழ்ந்து நிற்கையில், இருள் சூழ்ந்தாலும் இதையும் கடந்து நிமிர்வோம் என்ற நம்பிக்கை ஒளி தமிழ் மக்களின் வாழ்விலும் வீச வேண்டும்!

சரிந்து கிடக்கும் வாழ்வியல் உரிமைகளை தூக்கி நிறுத்தவும், இல்லாமை என்பதை எங்கும் இல்லாதொழிக்கவும்,

யாரும் யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலை நீங்கவும்,.

சகல மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ நீதி ஓங்கவும்,.

அழிவு யுத்த வடுக்களின் கண்ணீருக்கு பரிகாரம் தேடவும்,..

அரசியலுரிமை, அபிவிருத்தி, அன்றாட இடர் தீர்ப்பென எமது கனவு வெல்லவும், ஒரே நாடு ஒரே சட்டம் தொனிப் பொருளின் ஊடாக சகல மக்களும் சமத்துவமாய் வாழும் வலுவான அரசியலமைப்பை உருவாக்க, மதிநுட்ப வழி நின்று எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நித்திய ஒளியேற்ற உழைப்பதில் வெற்றி காண்பதே தீபாவளித் திருநாளை கொண்டாடும் எமது மக்களுக்கு நாம் வழங்கும் பண்டிகை நாள் பரிசாகும்.

இல்லங்கள் தோறும் தீப ஒளியேற்றும் எமது மக்களின் உள்ளங்கள் யாவும் நாளைய நம்பிக்கையின் சுடர் விட்டு ஒளிரட்டும்.

எம்மினிய மக்கள் சகலருக்கும் தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை