பெருந்தோட்ட மக்களது அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறும்

- ஜீவன் தொண்டமான் தீபாவளி வாழ்த்து

இருள் சூழ்ந்துள்ள மக்களை ஒளிக்கு கொண்டுவந்து அவர்களது இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளியை பிரகாசிக்கச் செய்த இந்த தீபாவளித் திருநாளை நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெருந்தோட்ட மக்களுக்கு எதிர்பார்க்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் அவர்களது அபிலாஷைகளும் நிறைவேற்றப்படும் என்று பெரிதான நம்பிக்கை எமக்குண்டு. மலையக மக்களின் வாழ்வுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை இ.தொ.கா வகுத்துள்ளது. தூரநோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆண்டு இறுதியில் நல்ல பலன்கள் கிட்டிவிடும் என்று நாம் நம்புகின்றோம். கடும் உழைப்பை வழங்கி இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்யும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் இருள் அகற்றப்பட்டு ஒளியினை தேடிச் செல்லும் மக்களாகவும் அவர்களது வாழ்வு செழிப்பாக மலர வேண்டும்.

இதேவேளை மலையகத்தில் படித்த யுவதிகளுக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பை ஏற்படுத்துவது இ.தொ.காவின் திட்டங்களில் ஒன்றாகும். 2021ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன் மலையக மக்களின் உயர்ச்சியை இலட்சியமாகக் கொண்டு புதிய பல திட்டங்களோடு அனைத்து மாவட்டங்களிலும் இ.தொ.கா தமது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது என்பதை இந்த தீபத்திருநாள் தினத்தில் மிக்க மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கின்றோம். மலையக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோமென்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை