ஜப்னா கிங்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் கணேசன் வாகீசன் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸின் அழைப்பை ஏற்று வருகை தந்த கிரிக்கெட் பணிப்பாளர் கணேசன் வாகீசன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும், பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்தோடு இப்பிராந்திய கிரிக்கெட் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் குறித்தும் வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேசிய மட்டத்திலுள்ள கிரிக்கெட் அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதுடன் அதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் பணிப்பாளர் கணேசன் வாகீசன் இங்கு குறிப்பிட்டார்.

பிரண்ட்ஸ் அணிக்கும், லக்கி அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் லக்கி அணியினர் 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர். முதலில் துடுப்பெடுத்தாடிய லக்கி அணியினர் 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெறுவதற்கு 155 ஓட்டங்களைப்பெறத் துடுப்பெடுத்தாடிய பிரண்ட்ஸ் அணியினர் 30 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர்.

கொழும்பு டி.ஸ்.சேனாநாயக்க கல்லூரியின் முன்னாள் முதலாம் தர கிரிக்கட் வீரரான கணேசன் வாகீசன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற கன்னி எல்பிஎல் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கு பெரும் பங்கு வகித்தவர் கணேசன் வாகீசன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sat, 11/13/2021 - 11:46


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை