குருணாகல் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 31 கடைகள்

குருணாகல் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 31 கடைகள்-31 Shops have Built Causing Inconvenience-Reserved for the public-Kurunegala Bus Stand

- COPA குழுவில் அம்பலம்

குருணாகல் பஸ் நிலையத்தில் பொது மக்கள் தரித்து நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 31 கடைகளை தனிப்பட்ட செலவில் அமைப்பதற்கு 31 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தலைமையில் கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த தகவல்கள் தெரியவந்தன. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்குப் பதிலாக கூட்டத்துக்கு இராஜாங்க அமைச்சர் தலைமை தாங்கியிருந்தார்.

இந்தக் கட்டுமானத்தை பொருளாதார வளர்ச்சிக்கான வழியாக குருநாகல் மாநகரசபை அர்த்தப்படுத்தியிருப்பதால் பொது மக்களின் நலனுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் பஸ் நிலையத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப திட்டமிடலுக்கு அப்பால் சென்று இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தவறான முறையின் கீழ் இந்த 31 கடைகளையும் அமைப்பதற்கு 31 தனி நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குருணாகல் மத்திய சந்தையின் கட்டுமானத்துக்காக மாநகர சபையின் பொறியியலாளர் மதிப்பீட்டையும் விஞ்சி 41% அதாவது 28,19,34,447 ரூபாவுக்கு கேள்விப்பத்திரம் சமர்ப்பித்த நபருக்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. முதலில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு பிழையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கு தெரியவந்தது.

கட்டடத்துக்கு அவசியமான சகல தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதற்கமைய குருநாகல் மாநகரசபை நல்லெண்ணத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொறியியல் திணைக்களத்தினால் தவறாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டமையால் குறைபாடுகளுக்கு வழிகோலியது என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நிலையில் தவறான முறையில் மதிப்பீட்டைத் தயாரித்த பொறியியலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, செஹான் சேமசிங்ஹ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்ஹ, குணபால ரத்னசேக்கர, காதர் மஸ்தான், வீரசுமன வீரசிங்ஹ, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Sat, 11/13/2021 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை