திருகோணமலை கடற்கரையில் கோஃப்போல் விளையாட்டை விரிவுபடுத்தும் நிகழ்வு ஆரம்பம்

இலங்கையில் கோஃப்போல் விளையாட்டை விரிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது நிகழ்வை கோஃப்போல் ஸ்ரீலங்கா கடந்த சனிக்கிழமை (13) திருகோணமலை கடற்கரையில் அறிமுகம் செய்தது. இவ்வறிமுக நிகழ்வில் கிட்டத்தட்ட ஐம்பது பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.அன்றைய தினம் இந்த மாணவர்கள் குழுக்காளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் ஈடுபடவைக்கப்பட்டனர். முதலாவது தடவையாக இப்போட்டிகளை விளையாடிய பிள்ளைகள் ஆர்வத்துடன் விளையாட்டில் ஈடுபட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் கோஃப்போல் செயலாளர் புஷ்பகுமார மதுரப்பெரும கருத்து தெரிவிக்கும் போது கொழும்புக்கு வெளியே முதன்முறையாக திருகோணமலை மாவட்டத்திலேயே தங்களது விரிவுபடுத்தும் இச்செசெயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.இலங்கையில் கோஃப்போல் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தவரும் இலங்கையின் கோஃப்போல் அம்மையார் என போற்றப்படுகின்றவருமான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஸ் வேன் நன்ஸ்பிற் இலங்கையில் அளுத்வட்ட திகன பிரதேசத்தில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான புனர்வாழ்வு இல்லத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது அங்குள்ள ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடுவதை அவதானித்தாக குறிப்பிட்ட அவர் இருபாலாரும் இணைந்து விளையாடக்கூடிய இவ்விளையாட்டை 2013 இல் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்ததாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜோஸ் வேன் நன்ஸ்பிற் கௌரவ விருந்தினராக கிழக்கிலங்கை கடற்படை கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் சஞ்ஜீவ டயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோஃப்போல் என்பது வலைப்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுக்களுடன் ஒத்த ஒரு விளையாட்டாகும். ஒவ்வொரு அணியிலும் நான்கு பெண் வீரர்கள் மற்றும் நான்கு ஆண் வீரர்கள் என எட்டு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கிடையே விளையாடப்படுகிறது. 1902 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் பாடசாலை ஆசிரியரான நிகோ ப்ரோகுய்சென் என்பவரால் இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நெதர்லாந்தில் ஏறத்தாழ 500 கழகங்களைச் சேர்ந்த 90000 க்கும் அதிகமானோர் கோஃப்போல் விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு தற்பொழுது கிட்டத்தட்ட 70 நாடுகளில் விளையாடப்படுகிறது.

1985 ஆம் ஆண்டு முதல்உலக விளையாட்டுப் போட்டிகளில்கோஃப்போல் விளையாடப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிலிருந்து உலக கோஃப்போல் சாம்பியன்ஷிப் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இவ்விளையாட்டின் முன்னணி நாடுகளாக நெதர்லாந்து, சீன தைபே மற்றும் பெல்ஜியம் ஆகியன விளங்குகின்றன. சர்வதேச கோஃப்போல் சம்மேளனம் 1933 ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உருவாக்கப்பட்டது. இலங்கையில் கோஃப்போல் ஸ்ரீலங்கா 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் சர்வதேச கோஃப்போல் சம்மேளனத்தின் 68 ஆவது உறுப்பு நாடாக திகழ்கின்றது.

திருகோணமலை குறூப், ரொட்டவெவ குறூப் நிருபர்கள்

Tue, 11/23/2021 - 08:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை