ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்களுக்கு தடை

தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்றுவதற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

திரையில் பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் முக்காடு அணியும்படியும் தலிபான்கள் அமுல்படுத்தி இருக்கும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. எனினும் எந்த வகையில் தலையை மறத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த வழிகாட்டலில் கூறப்படவில்லை.

சில விதிகள் தெளிவற்று இருப்பதாகவும் விளக்கம் தேவையாக இருப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் படிப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த விரைவிலேயே தலிபான்கள், பெண்கள் பாடசாலை செல்வதில் இருந்து வீடுகளில் இருக்கும்படி உத்தரவிட்டனர்.

1990களில் தலிபான்கள் முன்னர் ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் தடை விதித்தனர்.

இந்நிலையில் ஆப்கான் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட தலிபான் வழிகாட்டல்களில் எட்டு புதிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஷரிஆ அல்லது இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கான் பெறுமானங்களுக்கு எதிரான திரைப்படங்களுக்கு தடை விதிப்பதாகவும். உடலின் அந்தரங்க பாகங்களை ஆண்கள் வெளிப்படுத்தும் காட்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மதத்தை அவமதிக்கும் அல்லது ஆப்கானை தாக்குவதாக கருதப்படும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு கலாசார பெறுமானங்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு திரைப்படங்களையும் ஒளிபரப்பக் கூடாது என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கான் தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகம் வெளிநாட்டு நாடகங்களையே ஒளிபரப்புவதோடு அவைகளில் பெண்கள் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tue, 11/23/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை