தடுப்பூசி பெறாதோர் மீது ஜேர்மனியிலும் கட்டுப்பாடு

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 65,000க்கு மேல் பதிவாகியுள்ளது.

அங்கு நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்படி ஜெர்மானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி இல்லை. விளையாட்டு, கலாசார நிகழ்ச்சி ஆகியவற்றிலும் அவர்கள் கலந்துகொள்ள முடியாது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், அலுவலகத்திற்குச் செல்லவும் அவர்கள் வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். எளிதில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களைப் பாதுகாக்க, தாதிமை இல்லங்களில் பணிபுரியும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஜேர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை சுமார் 70 வீதமாக உள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெறாதவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் முதல் ஐரோப்பிய நாடு ஜேர்மனியல்ல.

செக் குடியரசு மற்றும் செக்கோசிலேவாக்கியாவில் கடந்த வியாழக்கிழமை இது போன்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

இந்த வார ஆரம்பத்தில் ஆஸ்திரியா தடுப்பூசி பெறாதவர்கள் மீது முடக்க நிலையை அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Sun, 11/21/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை