3,000 சிறு பாலங்களை அமைக்கும் பணியும் ஆரம்பம்

ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5000 சிறு பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் அதில் 3000 பாலங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 250 பாலங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றுக்கான திட்டங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முறைப்படி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை நிர்மாணிப்பதே அரசாங்கத்தின் இலக்கு. அத்துடன் மேம்பாலங்கள், வீதிகள் ஊடான பாலங்கள் சிறிய பாலங்கள் என ஆயிரக்கணக்கான பாலங்களை அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின்கீழ் வீதி அபிவிருத்தி தொடர்பில் மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை