12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இலங்கை

மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் போட்டியில், 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற, இலங்கை அணி தொடரில் 1-−0 என முன்னிலைபெற்றுள்ளது.

போட்டியின் நான்காவது நாள் ஆட்டரே நிறைவில் 52 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது.

குரூமா போனர் மற்றும் ஜசூவா டா சில்வா ஆகியோர் மிகவும் நுணுக்கமாகவும், நிதானமாகவும் ஓட்டங்களை குவித்தனர். இதில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான பாரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்தும் நெருக்கடி காட்டிய மேற்கிந்தியதீவுகள் அணிசார்பில், மிக அற்புதமாக ஆடிய ஜசூவா டா சில்வா அரைச்சதத்தை பதிவுசெய்தார். எனினும் இவர் 54 ஓட்டங்களை பெற்றிருந்த போது, லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மதியபோசன இடைவேளையின் போது, மேற்கிந்தியதீவுகள் அணி 125 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஆட முற்பட்ட போதும், இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சின் மூலமாக 79 ஓவர்கள் நிறைவில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

மேற்கிந்தியதீவுகள் சார்பாக குரூமா போனர் இறுதிவரை போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 220 பந்துகளுக்கு 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய தன்னுடைய 4வது ஐந்து விக்கெட் பிரதியை பதிவுசெய்து 5 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரவீன் ஜயவிக்ரம ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியை பொறுத்தவரை, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 386 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், மேற்கிந்தியதீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. பின்னர், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்த, 348 என்ற வெற்றியிலக்கை நோக்கிய மேற்கிந்தியதீவுகள் அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் ஊடாக, புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக வெற்றி சதவீதத்தை அடிப்படையாகக்கொண்டு தரவரிசை அமைக்கப்படும் என்பதால், 100 சதவீத வெற்றி பிரதியுடன் இலங்கை அணி முதலிடம் பிடித்துள்ளது. பட்டியலின், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/26/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை