'சீனாவுக்குத் தலை வணங்க மாட்டேன்' தாய்வான் ஜனாதிபதி இங்-வென் உறுதி

சீனா மற்றும் தாய்வான் இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் சீனாவிடம் இருந்து வரும் அழுத்தங்களுக்கு தலை வணங்கப் போவதில்லை என்றும் தமது ஜனநாயக வாழ்வை தொடரப்போவதாகவும் தாய்வான் ஜனாதிபதி ட்சய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

‘நாம் எவ்வளவு அதிகமாக சாதிக்கிறோமோ, அவ்வளவு பெரிய அழுத்தத்தை நாம் சீனாவில் இருந்து எதிர்கொள்கிறோம்’ என்று ட்சய் தெரிவித்தார்.

தாய்வானை சீனாவுடன் இணைக்கும் செயற்பாட்டை பூர்த்தி செய்யப்போவதாக சீனா ஜனாதிபதி ஷி ஜின்பின் குறிப்பிட்ட நிலையிலேயே, நேற்று இடம்பெற்ற தாய்வான் தேசிய தினத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தாய்வான் தம்மை ஒரு இறைமை பெற்ற நாடாக கருதும் அதே நேரம், அதனை தமது பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா பார்க்கிறது.

அதனை சீனாவுடன் இணைப்பதற்காக படைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை சீனா மறுக்கவில்லை.

இந்நிலையில் அண்மைய நாட்களில் தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் முன்னெப்போதும் இல்லாத பெரும் எண்ணிக்கையான சீன போர் விமானங்கள் ஊடுவியுள்ளன. இது தாய்வான் ஜனாதிபதிக்கான எச்சரிக்கையாக உள்ளது என்று அவதானிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

தாய்வான் ஜனநாயகம் எனும் முதல் வரிசை பாதுகாப்பில் நிலைகொண்டுள்ளது என்று ட்சய் கூறினார். சீனா எம்மீது வலுக்கட்டாயமாக சுமத்தும் பாதையை எமது நாடு ஏற்காது. அது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் இறைமையைத் தராது என்று அவர் குறிப்பிட்டார்.

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் சீன இராணுவ விமானங்கள் பறப்பது வான் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை தீவிரமாக பாதிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலைமை சிக்கலானதும் நெகிழ்ச்சியானதாகவும் உள்ளது என்றார்.

தாய்வான் இது தொடர்பில் அவசரப்பட்டு செயற்படாது என்றும் ஆனால் அதன் பாதுகாப்பை பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

ட்சய், சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தபோதும், அவரை பிரிவினைவாதியாகக் கூறும் சீனா அந்த அழைப்புகளை நிராகரித்து வருகிறது.

சீனாவுக்கு எதிராக நிற்பதாக வாக்குறுதி அளித்த ட்சய், கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருந்தார்.

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை