தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி நீதி கேட்ட இளைஞர்

வவுனியாவில் சம்பவம்

 

காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்ட மனைவியை பெற்றோர் அழைத்துச் சென்றமையை கண்டித்தும் பொலிஸார் தனது மனைவியை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவில்லையென்பதையும் கண்டித்து வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞரொருவர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இவ்வாறு கோரிக்கை விடுத்த இந்த இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் அவர்களது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் பொலிசார் இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இவ் விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லையென இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர். நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லையென குற்றம் சாட்டினர்.

இதேவேளை இளைஞரை மீட்பதற்காக இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியபோதும் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.

ஓமந்தை விசேட நிருபர்

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை