சீனா தாக்கினால் தாய்வானை பாதுகாப்பதற்கு பைடன் உறுதி

சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாய்வான் மற்றும் சீனா தொடர்பில் அமெரிக்காவின் நீண்ட கால வெளியுறவுக் கொள்கையில் இருந்து விலகிய ஓர் அறிவிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியின் இந்த கருத்து அமெரிக்க கொள்கைகளில் குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் பின்னர் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தாய்வான் தம்மை தற்பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா உதவும் என அமெரிக்கச் சட்டத்தில் உள்ளது. எனினும் தாய்வான் மீது சீனா தாக்குதல் தொடுத்தால் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி அந்தச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்குமா என டவுன் ஹோலில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ‘ஆம், அதை செய்ய நாம் ஒப்புக் கொண்டுள்ளோம்’ என விடையளித்தார் ஜோ பைடன். நீண்ட காலமாகவே சீனா தாய்வானை தாக்கினால், அந்நாட்டை பாதுகாப்பது தொடர்பான விடயத்தில் அமெரிக்கா அமைதியாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது தாய்வானை பாதுகாப்போம் என கூறியுள்ளது.

இந்நிலையில் பைடனின் கருத்துக்கு சீனாவிடம் இருந்து உடன் எந்த பதிலும் கூறப்படவில்லை.

அமெரிக்கா தாய்வானுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேணாதபோதும், தாய்வான் உறவுகள் சட்டத்தின் கீழ் அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்று வருகிறது.

மறுபுறம் சீனாவுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேணும் அமெரிக்கா, அதன்மூலம் ஒரே சீன அரசு இருப்பதையும் இராஜதந்திர ரீதியில் ஒப்புக்கொண்டுள்ளது.

தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலால் சீனாவின் பல டஜன் போர் விமானங்கள் அடிக்கடி பறந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளது.

தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949 இல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்  சில மாதங்களுக்கு முன் கூறியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை