முறைகேடு வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (66) அந்த நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2007 முதல் 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த சர்கோஸி, 2012இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 2.25 கோடி யூரோவை விட அதிகமாக இரு மடங்கு தேர்தல் நிதி திரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பாரிஸ் நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அந்த ஓராண்டில் மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தாம் தவறு செய்யவில்லை என்று மறுத்து வரும் சார்கோஸி தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மற்றும் உண்மையைத் தேடி, உரிமைக்காக இறுதிவரை போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக சர்கோஸியின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

Sat, 10/02/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை