2022 பட்ஜட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு

பாராளுமன்றில் அமைச்சர் சுசில் தெரிவிப்பு

 

அமைச்சரவை உபகுழுவின் சாதகமான சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாணப்படுமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது வெறுமனே நிதிப் பிரச்சினை மாத்திரமல்ல. 1994ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை அரசமைப்பை அறிமுகப்படுத்தி சம்பளத்தை அதிகரித்தமையால் ஏற்பட்ட அரச சேவை முரண்பாடுகளை தீர்ப்பதற்கு பி.சி பெரேரா ஆணைக்குழுவை நியமித்த பின்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை பின்தள்ளி ஏனைய அரச சேவைகளின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க முற்பட்டமையால் ஏற்பட்ட பிரச்சினையாகும். ஆசிரியர் மற்றும் ஏனைய அரச சேவைகளுக்கிடையிலான சம்பள முரண்பாடுதான் கடந்த 26 வருடங்களாக நிலவுகிறது.

2018ஆம் ஆண்டு அமைச்சரவை உப குழுவின் சம்பள முறை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் சுபேதினி குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் சம்பளம் மற்றும் சேவையாளர்கள் குழு தமது சிபாரிசுகளை இன்னமும் வழங்கவில்லை.

கொவிட்-19 நெருக்கடியால் நிதி தொடர்பிலான பிரச்சினைகளுள்ள அதேவேளை, ஏனைய அரச சேவைகளுக்கு பாதிப்பில்லாது இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற தேவை அனைத்து அரசாங்கங்களுக்கும் இருந்தமையால்தான் கடந்த 26 வருடங்களாக இந்த பிரச்சினை தொடர்கிறது. அமைச்சரவை உபக் குழுவின் சாதகமான சிபாரிசுகளின் பிரகாரம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை