பொருளாதார மந்த நிலையை உருவாக்கலாமென எச்சரிக்கை

சீனாவின் காணி, கட்டட அபிவிருத்தித் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி அதன் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சீனாவின் உற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிகம் என்பனவற்றுக்கு அடுத்ததாக பாரிய பொருளாதார கட்டமைப்பாக காணி, ஆதன அபிவிருத்தித் துறை விளங்குவதால் இதில் ஏற்படக்கூடிய சரிவானது, எல்லாத் துறைகளிலும் பிரதிபலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி அபிவிருத்தி வணிகர்களுக்கு வங்கிகள் அதிக கடன்களை வழங்கியிருப்பதும் அவற்றை முறையாக திருப்பி செலுத்துவதில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளால் சீனாவின் முக்கிய ஐந்து வங்கிகளின் கடன் பளு 30 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இது கணக்கிடப்பட்டிருப்பதாகவும் நிக்கி ஆசியா செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. திருப்பிச் செலுத்தப்படாத கடன் பழுவினால் சிறிய வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இத்தகைய கடன் சுமை ஷங்காய் வங்கியில் 26 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன பொருளாதாரத்துறை நிபுணரான டிங்லூ, சீன அரசின் தாங்கும் சக்தியையும் உலகளாவிய முதலீடுகளையும் பரீட்சிப்பதாக இப்பிரச்சினை மாறி உள்ளதாகவும், வளர்ச்சி மந்த நிலையை தாங்கும் வகையில் சந்தைகள் தயார் படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இவ் வருடத்தில் மாத்திரம் 230 காணி அபிவிருத்தி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்திருப்பதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது பத்து சதவீத அதிகரிப்பென்றும் அரசுக்கு சொந்தமான பீப்பள்ஸ் கோர்ட் டெய்லி பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற காணி ஆதன நிறுவனமான எவர்கிராண்ட், தனது கடன்களை மீளச் செலுத்த வேண்டுமானால் தமது சொத்துக்களை விற்க வேண்டியிருக்குமெனவும் அல்லது புதிய முதலீட்டாளர்களை சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்குமெனவும் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தது.

ஒரு வங்கியின் மொத்த கடன் வழங்களில் காணி ஆதன அபிவிருத்திக்கு வழங்கப்படும் கடன் 40 சதவீதத்துக்கு மேற்படலாகாது என அதிகாரிகள் வங்கிகளை பணித்துள்ளனர்.

Sat, 09/11/2021 - 13:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை