முற்றுகையிட்டுள்ள தலிபான் படையை எதிர்க்கும் படைக்கு தஜிகிஸ்தான் வான்வழி உதவி

ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் பள்ளத்தாக்கைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தலிபான் படை, அப்பள்ளத்தாக்குக்கான சகல விநியோக பாதைகளைத் தடைசெய்திருப்பதாகவும் இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேசமயம் தலிபான் இப்பள்ளத்தாக்கை சுற்றிவளைத்துள்ள நிலையில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை ஹெலிகொப்டர்கள் மூலம் தஜிகிஸ்தான் வான் வழியாக விநியோகித்திருப்பதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் பஞ்ஜ்சீரை கைப்பற்றும் ஒரு உபயமாக எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்திருக்கும் தலிபான் படையினர் பெண்களையும் குழந்தைகளையும் சிறை பிடித்திருப்பதாகவும், மேலும் முன்னேறிச் செல்வதற்காக அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும் பஞ்சீர் மக்கள் படை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் இன்றளவும் கைப்பற்றப்படாத பகுதியாக பஞ்சீர் பள்ளத்தாக்கு விளங்குவதால் அதைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் தலிபான் படை ஈடுபட்டுள்ளது. ஆப்கானின் புகழ்பெற்ற கமாண்டரான அஹ்மட் ஷா மசூதின் மகனான அஹமட் மசூத், முன்னாள் ஆப்கான் அரசின் முதலாவது உப ஜனாதிபதி அம்ருல்லா சலே ஆகியோர் இங்கிருந்தபடி தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்துகின்றனர்.

காபூலில் இருந்து 90 மைல் தொலைவில் இந்துருஷ் மலைகளுக்கு இடையே இயற்கை அரண்களால் சூழப்பட்டதாக பஞ்சீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இப் பிரதேசத்தை தம் வசமாக்கும் பொருட்டு அப்பகுதி மூத்த குடிகளுடன் முன்னர் தலிபான் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதில் அது தோல்வியில் முடிந்த நிலையிலேயே முற்றுகை தீவிரமடைந்திருப்பதோடு மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன.

Mon, 09/06/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை