சீனாவில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் திபெத்தியர்கள்

மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டு

சீன ஆதிக்கத்துக்கு உட்பட்ட திபெத்திய பிரதேசங்களில் வாழும் திபெத்திய மக்கள் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுவதாகவும் திபெத்திய மனித உரிமை அமைப்புகள் சீனாவின் மீது குற்றம் சுமத்தியுள்ளன.

இந்தியாவின் தர்ம சாலாவில் இருந்து இயங்கும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான திபெத்திய நிலையம் என்ற அமைப்பு, காணாமல் போனோர்க்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ம் திகதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 40 பேர் மட்டில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. பெண் துறவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், சமூகத் தலைவர்கள், மூளைசாலிகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரில் அடங்குவர் என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அரச இரகசியங்களை வெளிப்படுத்தல் என்பன போன்ற போலி குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் வலிந்து கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிந்து கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுவோர் தொடர்பான தகவல்கள் தாமதமாகவே வெளியில் தெரிய வருவதாகவும், திபெத் பிரதேசத்தில் கடுமையான தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள் இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட திபெத் வொட்ச் நிறுவனத்தின் ஆய்வாளரான பேமா கயால், சீனா முழுமையான சட்டத்தின் ஆட்சிக்குட்பட்ட நாடாக 2035 இல் திகழும் எனக் கூறப்படுகின்ற போதிலும் இத்தகைய கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் மனித உரிமைகள் மறுப்பு என்பனவற்றுக்கு மத்தியில் இது எப்படி சாத்தியமாகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mon, 09/06/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை