கர்ப்பிணி பெண் கொலை: தலிபான் மீது குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் பொலிஸார் ஒருவரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக சம்பவத்தை பார்த்தவர்களை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களால் பானு நெகர் என்று அழைக்கப்படும் அந்தப் பெண், மத்திய கோஹார் மாகாணத் தலைநகர் பிரொஸ்கோவில் அவரது வீட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகும் நிலையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்தக் கொலையுடன் தமக்கு தொடர்பில்லை என்று குறிப்பிட்டிருக்கும் தலிபான்கள் இது பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

‘எங்களுக்கு அந்த சம்பவம் குறித்து தெரியும். தலிபான்கள் அவரை கொலை செய்யவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன். நாங்கள் அச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்’ என தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

ஏற்கனவே முந்தைய அரசிடம் வேலை செய்தவர்களுக்கு தலிபான் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், பானு நெகரின் மரணத்துக்கு தனிப்பட்ட விரோதம் அல்லது மற்ற காரணங்கள் உள்ளதா என விசாரித்து வருவதாகவும் சபியுல்லா கூறினார்.

Tue, 09/07/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை