தொற்றா நோய்களை கவனிக்காது விடுவதால் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

வைத்தியர் எம்.அரவிந்தன்

கொவிட் தொற்று நோயால் ஏற்படுகின்ற மரணங்களை விட தொற்றா நோய்களினை கவனிக்காது விட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் பாரதூரமானதென வைத்தியர் எம்.அரவிந்தன் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்றைய கால கட்டத்தில் நாங்கள் கொரோனா போன்ற தொற்று நோய்கள் பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதேநேரத்தில் தொற்றாநோய்களை நாங்கள் மறந்து கொண்டே செல்கிறோம். கொரோனா எத்தனை வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்பதை எங்களால் கூற முடியாது. ஆகவே தொற்றுநோய் கவனிப்பது போன்று தொற்றா நோய்கள் தொடர்பாக எனது கவனத்தை செலுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம்.

நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், இதய நோய்,சுவாச நோய் போன்றவை தொற்றாநோய்கள் ஆகும். நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா ஏற்படும் போது அவர்களுக்கான பாதிப்புகள் அதிகமாகவே ஏற்படும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் 30 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. 25 சதவீதமானவர்களுக்கு உயர் குருதியமுக்கம் இருக்கின்றது. பலருக்கு கொலஸ்ட்ரோல் பிரச்சினை காணப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கின்றபோதும் கொரோனா அச்சம் காரணமாக, அவர்கள் சிகிச்சைக்கு வருவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்.

கொவிட் தொற்று நோயால் ஏற்படுகின்ற மரணங்களை விட இந்த தொற்றா நோய்களினை கவனிக்காது விட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் பாரதூரமானது.தொற்றாநோய் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களுடைய நோய்களுக்கான சிகிச்சைகள் அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படுகின்றன.யாழ் போதனா வைத்தியசாலைக்கு வர முடியா விட்டால் அருகிலுள்ள பிராந்திய சிகிச்சை நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

அதே போல் மருந்துகளை வழங்குவதற்கு நடைமுறைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை கவனிக்கவேண்டும். மிக இலகுவாக அருகிலுள்ள வைத்தியசாலையில் இதனை பரிசோதித்து கொள்ளலாம்.

தற்போதைய வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் ஏற்படுகின்றது. அதிக கலோரியுள்ள ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு வரும் தன்மை அதிகரித்து வருகின்றது. சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. பெற்றோர்கள் அனைவரும் இணைந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே தொற்றா நோய்கள் தொடர்பில் நாங்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் இருதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. அத்தகைய நோயாளிகள் கூட இன்று வைத்தியசாலைக்கு வருவதற்கு தயங்குகின்றனர். இவ்வாறான நோயுள்ளவர்கள் பயங்களை தவிர்த்து சிகிச்சையை பெற்றுக்கொள்ளுங்கள். தடுப்பூசிகள் தொடர்பாக தொற்றாநோய் உள்ளவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். சிலருக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம் ஆனால் இந்த தடுப்பூசி மிகவும் இன்றியமையாதது. தடுப்பூசி தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் குடும்ப வைத்தியரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

யாழ்.விசேட நிருபர்

 
Thu, 08/19/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை