காபுல் விமானநிலையம் மீது சரமாரி ரொக்கெட் தாக்குதல்

அமெரிக்க துருப்புகள் இன்று வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது துருப்புகளை வாபஸ் பெறுவது மற்றும் ஐ.எஸ் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதிக் கட்ட வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த காபுல் விமான நிலையத்தின் மீது நேற்று சரமாரி ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றது.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறும் காலக்கெடு இன்று செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. இதன் மூலம் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் பதில் நவடிக்கையாக ஆப்கானுக்கு படையெடுத்த அமெரிக்காவின் மிக நீண்ட இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரவுள்ளது.

எனினும் அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்த்த கடும்போக்கு இஸ்லாமியவாதக் குழுவான தலிபான்கள் ஆப்கானில் மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், வெளிநாட்டினர் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆப்கானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை அமெரிக்கா தலைமையில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

காபுல் விமான நிலையத்தில் இருந்து இதுவரை 120,000க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசி நாளான இன்று விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள் வெளியேற திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க படைகள் தற்போது தமது நாட்டு இராஜதந்திரிகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் அவதானம் செலுத்தியுள்ளன.

அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு தலிபான்களின் போட்டிக் குழுவான் ஐ.எஸ் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவதோடு விமானநிலையத்தின் மீது கடந்த வியாழக்கிழமை நடத்திய தற்கொலை தாக்குதலில் 13 அமெரிக்க துருப்புகள் உட்பட 180 க்கும் அதிகமாவர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் தாக்குதல்கள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் காபுலில் ஐ.எஸ் தற்கொலைதாரிகளை இலக்கு வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே நேற்றுக்காலை விமானநிலையத்தை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

விமானநிலையத்தை நேரடியாக இலக்கு வைத்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. எனினும் அது வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

ரொக்கெட்ட தாக்குதலில் சேதமடைந்த கார் ஒன்றின் புகைப்படத்தை ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காரின் பின்புறமாக ரொக்கெட் குண்டின் பாகமும் காணப்படுகிறது.

ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டிருப்பதாகவும் அவை அனைத்தும் விமானநிலைய ஏவுகணை பாதுகாப்பு முறையால் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் உயிர்ச்சேதங்கள் அல்லது விமானநிலையத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

'விமானநிலையம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது தொடக்கம் எம்மால் சரியாக உறங்க முடியவில்லை' என்று விமானநிலையத்திற்கு அருகில் வசிக்கும் அப்துல்லா என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி சுடும் சத்தம், ரொக்கெட் வீசும் சத்தம், சைரன் ஒலி அல்லது பெரிய விமானங்களின் சத்தம் பெரும் தொந்தரவாக உள்ளது. அவர்கள் இப்போது நேரடியாக தாக்குதல் நடத்துகிறார்கள், இது உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை