75 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவு

 - Dr.சித்ரமாலி டி சில்வா

நாட்டில் 75 வீதமான கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.  கர்ப்பிணித் தாய்மாருக்கு தடுப்பூசிகளை வழங்கும் வாரம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் பெருமளவிலான கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத கர்ப்பிணித் தாய்மார்கள் தமது பிரதேசத்தில் உள்ள தடுப்பூசி நிலையம் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அல்லது ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமானால் அதன் பாதிப்பு அதிகமாக காணப்படும் என்றும் இதுவரை நாட்டில் 32 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் மோசமான நிலைமை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போது 900 கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்து இதுவரை நாடளாவிய ரீதியில் 4,200 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த தகவலை வழங்கினார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை