டெல்டா திரிபு வைரஸை விட பயங்கர வீரிய திரிபு பரவும் அபாயம்

மரபணு விஞ்ஞான நிறுவன பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரிக்கை

நாட்டில் தற்போது பரவும் டெல்டா கொரோனா திரிபு வைரஸை விட மேலும் வீரியமிக்க மற்றுமொரு கொரோனா வைரஸ் திரிபு நாட்டில் பரவக்கூடிய எச்சரிக்கை நிலை காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி நிறுவனம் புதிய கொரோனா வைரஸ் திரிபுகளை இனம் காண்பதற்கான ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பு, கம்பஹா உட்பட 6 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நாடு மிக ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தீவிரமான அவதானத்தினை அது தொடர்பில் செலுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேற்படி சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

கொழும்பு, கம்பகா, குருநாகல், புத்தளம், காலி,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் நிலையில் கட்டில்களின் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமும் இனங் காணப்படும் வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்பத்திரிகளின் கொள்ளளவு நிறைவடைந்து வீடுகளில் வைத்து நோயாளர்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இனங்காணப்பட்டு வரும் வைரஸ் தொற்று நோயாளர்களில் காணப்படும் அறிகுறிகளை நோக்கும் போது அவர்களுக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவருகிறது.

அதற்கிணங்க குடும்பத்தில் ஒருவருக்கு அந்த தொற்று ஏற்படுமானால் அனைவருக்கும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டு வாரத்தின் பின்னரே பாதுகாப்பு கிடைப்பதாகவும் எனினும் அவர்களுக்கும் வைரஸ் தொற்றுக்கான சாத்தியம் உள்ளதாகவும் தடுப்பூசிகள் மூலம் மரண அச்சுறுத்தலில் இருந்து தவிர்த்துக்கொள்ள மட்டுமே முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Fri, 08/06/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை