ஈரானுடன் பதற்றம்: சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் பேர்ன் இஸ்ரேல் பயணம்

பொது எதிரியான ஈரான் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க மத்திய உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பேர்ன் நேற்று இஸ்ரேல் பயணமானார்.

எனினும் பேர்ன் உடன் இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரத்தை இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட்டின் பேச்சாளர் வெளியிடவில்லை.

எனினும் இதன்போது ஈரானின் அணுத் திட்டம் மற்றும் பிராந்தியத்தில் அதன் செயற்பாடுகள் பற்றி இஸ்ரேல் பிரதமர் மற்றும் சி.ஐ.ஏ தலைவரிடையே பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று வெல்லா நியுஸ் என்ற இணைய செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது பேர்ன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் ரமல்லாவுக்கும் சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் பஜீத் பராஜ்ஜையும் சந்திப்பார் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் இஸ்ரேலின் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஈரான் மீது குற்றம்சாட்டப்படும் பதற்றமான சூழலிலேயே சி.ஐ.ஏ தலைவரின் பயணம் இடம்பெற்றுள்ளது.

ஓமானிய கடற்பகுதிக்கு அப்பால் கடந்த மாதம் எம்.டீ மெர்சர் ஸ்ட்ரீட் என்ற அந்த எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் இடம்பெற்றது. இதில் அந்தக் கப்பலில் இருந்த பிரிட்டன் மற்றும் ருமேனிய நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டது.

எனினும் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

ஒரு இராஜதந்திரியாக இருக்கும் பேர்ன், ஈரானுடனான 2015 அணு உடன்படிக்கையில் அமெரிக்காவின் அணுகல் தொடர்பில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இஸ்ரேலுடன் அதிகம் நெருக்கம் காட்டிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு இந்த உடன் படிக்கையில் இருந்து விலகியதோடு ஈரான் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்தார்.

எனினும் அவருக்கு பின்னர் வந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உடன்படிக்கையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர ஈரானுடன் பல சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

Wed, 08/11/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை