அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு; காலதாமதத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதில் காலதாமத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. மிகவிரைவாக சிறந்த தீர்மானமொன்றை எட்டுவதற்கே அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகசந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான யோசனைகளை முன்மொழிய விசேட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடானது 24 வருடங்களாக உள்ள ஒரு பிரச்சினையாகும். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்வை முன்மொழிந்துவிட முடியாது. அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் முடிவானது ஆசிரியர் சேவைக்கு சமாந்திரமான ஏனைய சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, அனைத்து அரச சேவைகளுக்கும் நிலையான தீர்வொன்று அவசியம் என்பதே அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும்.

நாட்டில் கொவிட் தொற்று பரவலின் தீவிரத்தன்மையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து வருவாய் துறைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பேண வேண்டிய கடமையை அரசாங்கம் ஏற்றுள்ளதால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்கும் மிகவும் பொறுத்தமான ஏற்பாடானது வரவு – செலவுத் திட்டமாகும்.

எதிர்வரும் மூன்று மாதகாலத்தில் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவது குறித்தே அமைச்சரவையில் அதிகமாக ஆலோசிக்கப்பட்டது. காலதாமதத்தை ஏற்படுத்த எவ்வித அவசியமும் கிடையாது. மிகவும் விரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதே அமைச்சரவையின் நோக்கமாக அமைந்தது. அந்த இலக்கை அடைந்துக்கொள்ள டளஸ் அழகப்பெரும தலைமையில் 4 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி மிக விரைவாக தீர்வை முன்மொழிவது இக்குழுவின் பணியாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

 

 

Wed, 08/11/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை