சர்வகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும்

அரசிடம் சஜித் பிரேமதாச கோரிக்ைக

நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் உடனடியாக சர்வகட்சி கூட்டமொன்றுக்கு அரசாங்கம் அழைப்புவிட  வேண்டுமென்பதுடன், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி நாட்டை கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, மக்களுக்கு அத்தியாவசியமான எரிவாயு மற்றும் பால் மாவுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. எரிவாயுக்கான நீண்ட வரிசை இப்போது கடைகளுக்கு அருகில் காணப்படுவதோடு பால் மாவுக்கு இது போன்ற நிலைமையே காணக்கிடைக்கிறது.

கொரோனா பேரழிவால் கடும் நெருக்கடியில் வாழும் மக்கள் தங்கள் உணவை சமைக்கத் தேவையான எரிவாயுவைக் கூட இழந்துள்ளனர். பால் மாவை ஓர் ஆடம்பரப் பொருளாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு குழந்தைக்கு பால் மாவைக் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தன்னிச்சையாக பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி 600 பில்லியன் ரூபாவை இழந்தது. நுகர்வு பொருட்களின் விலைகளும் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதோடு இது குறித்து அரசாங்கம் எத்தகைய கவனத்தையும் செலுத்தாதுள்ளது.

நாட்டில் ஏற்கனவே கடுமையான எரிபொருள் பற்றாக்குறை உள்ளது. எண்ணெய் இறக்குமதி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இலங்கை கண்டிப்பாக கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும். நாடு எதிர்கொள்ளும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை குறித்து அனைத்துக் கட்சியும் தரப்பினரும் ஒன்று கூடி கலந்துரையாடி விரைவான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும். அரசாங்கம் இதுவரை அதில் ஆர்வம் காட்டவில்லை. இது அரசாங்கத்தின் தன்னிச்சையான அணுகுமுறையைத் தவிர வேறொன்றையும் குறிக்கவில்லை. இந்த நாட்டில் அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் தான் விளையாடுகிறோம் என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை